Monday, December 28, 2009

இவரை பற்றி அறிவோம் - 1 திரு.கக்கனஜி

      திரு.கக்கனஜி அவர்கள். 18.06.1908 - 28.12.1981

இந்திய நாட்டின் மக்கள் பணம் அரசியல்வாதிகளால் கொள்ளையடிக்கப்பட்டு 70 லட்சம் கோடி ஸ்விஸ் நாட்டு வங்கியில் இருப்பதை மீட்போம் என காங்கிரஸ் தனது தேர்தல் வாக்குறுதியில் சொன்னது... ஆனால் தேர்தல் முடிந்து இத்துனை நாள் ஆகியும் அவர்களால் அதை செய்ய முடியவில்லை. செய்ய முடியவில்லை என்பதை விட செய்ய தாயாரில்லை என்று சொல்லலாம். இந்த இந்த காங்கிரஸ் கட்சியில்தான் இந்த மனிதனும் இருந்தார் என்பதை நம்புங்கள்.  

'கக்கன்' - ஆட்சி அதிகாரத்தில் இருந்தும், எளிமையின் சின்னமாக இனறைய இளைய சமுதாயத்திற்க்கு அடையாளம் காட்டப்படுபவர். ஆடம்பரம் என்பதை அறியாதவர். தமிழக மக்கள் அறிந்த கக்கன் 18.06.1908 அன்று மதுரை மாவட்ட, மேலூர் தாலுக்காவிலுள்ள தும்பைபட்டி கிராமத்தில் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தார்.

தனது இளவயதிலேயே சுதந்திர போராட்டத்தில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்டார். பள்ளி பருவத்திலேயே கங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டார். தலித்துகள் மற்றும் சாணார்கள் கோயில்களில் நுழைவது தடை செய்யப்பட்டிருந்த காலத்தில் அப்போது இருந்த இராஜாஜி அரசு கோயில் உள்நுழைவு அதிகாரம் மற்றும் உரிமைச் சட்டம், 1939 என்ற சட்டத்தினை கொண்டு வந்தது. இந்த நிலையை பயன்படுத்தி தலித்துக்கள் மற்றும் சாணர்களை கக்கன் அவர்கள் தலைமைத் தாங்கி மதுரை கோயிலினுள் அழைத்துச் சென்றார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயனை எதிர்த்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் கக்கன் பங்கேற்ற காரணத்தால் அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
திரு.கக்கன் அவர்கள் பதவி வகித்து பெருமை சேர்த்த பதவிகள்:

தொகுதிப் பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று 1946 முதல் 1950 வரை உறுப்பினராக பொறுப்பு வகித்தார். கக்கன் மக்களவை உறுப்பினராக 1952 முதல் 1957 வரை பொறுப்பு வகித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை காமராஜர் விட்டு விலகியபொழுது (காமரஜர் முதல்வராக பொறூப்பு ஏற்றதால்) கக்கன் அந்தப் பதவியை ஏற்றார். இந்திய தேசிய காங்கிரஸ் 1957 இல் மீண்டும் வெற்றிபெற்று மதராஸ் மகாணத்தின் ஆட்சி பொறுப்பை ஏற்றபோது கக்கன் பொதுப்பணித்துறை(மின்துறை நீங்கலாக), அரிசன நல்வாழ்வு, பழங்குடியினர் நலத்துறை ஆகியத் துறைகளின் அமைச்சராக ஏப்ரல் 13, 1957 இல் பொறுப்பேற்று கொண்டார். மார்ச் 13, 1962 முதல் அக்டோபர் 3, 1963 வரை விவசாயத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். ஏப்ரல் 24, 1962 முதல் வணிக ஆலோசனைக்குழுவின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். அக்டோபர் 3, 1963 அன்று மாநில உள்துறை அமைச்சராக பொறுப்பேற்று 1967 இல் காங்கிரஸ் தமிழ்நாட்டில் தோற்கும் வரை அப்பொறுப்பிலிருந்தார்.


கக்கன் அவர்கள் அமைச்சராக இருந்தபோதுமேட்டூர், வைகை அணைகள் கட்டப்பட்டன. அரிசன சேவா சங்கம் உருவாக்கப்பட்டது. இந்த சங்கம் தலித்துக்களின் வாழ்வு முன்னேற்றத்திற்காக பாடுப்பட்டது. திரு.கக்கன் அவர்கள் விவசாய அமைச்சராக பொறுப்பில் இருந்த காலத்தில் இரண்டு விவாசாயப் பல்கலைக் கழகங்கள் மதராஸ் மகாணத்தில் துவக்கப்பட்டன. 1999 ஆம் ஆண்டு இவரின் பணிகளைப் பாராட்டி இந்திய அரசு இவரின் உருவப்படம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்டு கௌரவப்படுத்தியது.

உள்துறை, வேளாண்மை, அரிஜன நலத்துறை உட்பட அமைச்சரவைப் பொறுப்புகளை 9 ஆண்டுகாலம் வகித்தார். ஒரு பதவி கிடைத்தாலே தன் பரம்பரைக்கே சுருட்டிக்கொள்ளூம் இந்த ஆட்சியாளர்களை போல் இல்லாமல் திரு.கக்கன் அவர்கள் நேர்மையின் மறு உருவமாக இருந்தார். 

             பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் அமைச்சர் அவையில் கக்கன் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் காமராஜர் அவர்களின் நம்பிக்கைக்குரிய சீடராக இருநதார்.அமைச்சராய் இருந்தவர் அரசு பேருந்துக்கு காத்து நின்று பயணம் போனதும்; மதுரை பொதுமருத்துவமனை யில் படுக்கை கூட இல்லாமல் தரையில் படுத்திருந்ததும் நாடறிந்த செய்தி.

1975 ஆம் ஆண்டு காமராஜர் மறைவுக்கு பிறகு திரு.கக்கன் அவர்கள் தீவிர அரசியலில் இருந்து விலகினார். 1979ம்ஆண்டு அரசு அவருக்கு இலவச பஸ் பாஸ் ,வீடு, மருத்துவ வசதி அளித்தது.


1981 டிசம்பர் 28 ஆம் நாள் இந்தத் அர்ப்பணிப்புச் சுடர் அணைந்தது.

Sunday, October 18, 2009


வாழ்க்கை வரலாறு

பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் விருதுநகரிலே ஒரு வியாபாரக் குடும்பத்திலே பிறந்தவர் ஆவார். அந்தக் காலத்தில் அந்த ஊருக்குப் பெயர் விருதுப்பட்டி.

காமராஜர் தாயார் பெயர் சிவகாமி அம்மாள். தந்தையின் பெயர் குமாரசாமி நாடார். அவர் விருதுப்பட்டியிலே தேங்காய் மொத்த வியாபாரம் செய்து வந்தார். சிவகாமி அம்மாளுக்கு இரண்டு சகோதரர்கள். ஒருவர் கருப்பையா நாடார். - இவர் துணிக்கடை வைத்திருந்தார். மற்றொருவர் பெயர் காசிநாராயண நாடார். இவர் திருவனந்தபுரத்திலே மரக்கடை வைத்து நடத்தி வந்தார்.

1903- ஆம் வருடம், ஜுலை மாதம் 15-ஆம் தேதி, காமராஜர் பிறந்தார். அவருக்கு குல தெய்வமான காமாட்சியம்மாளின் பெயரையே முதலில் சூட்டினார்கள்.

கண்ணனைப் பாரதி ”கண்ணம்மா” ஆக்கி அழைத்துப் பாடிப் பரவசப்பட்டதுபோல் ஆணாகப் பிறந்த காமராஜரை ”காமாட்சி” ஆக்கி அனைவரும் அழைத்து மகிழ்ந்தார்கள்.

தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், தன் செல்லக் குழைந்தையை ”ராஜா” என்றே அழைத்து வந்தாள். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராஜ்’ என்று ஆனது.

காமராஜருக்குப் பின்னர், சிவகாமி அம்மாள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.நாகம்மாள் என்று அந்தக்குழந்தைக்குப் பெயர் சூட்டினார்கள். காமராஜரும் தங்கையிடம், அன்பும் பாசமும் கொண்டிருந்தார்.

காமராஜர் தனது பள்ளிப் படிப்புக்காலங்களிலேயே, இளம் வயதிலேயே, விருதுப்பட்டியில் நடந்த பொதுக்கூட்டங்களுக்குப் போகலானார். ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருந்த காலம் அது. காமராஜர் இளம் வயதில் கேட்ட பொதுக் கூட்டங்களே அவரைப் பிற்காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரராகக் மாற்றியது.

”தந்தையொடு கல்விபோம்” - என்பதற்கு ஒப்ப, காமராஜரின் தந்தை குமாரசாமி நாடாரின் மறைவிற்குப் பின் காமராஜரின் பள்ளிப்படிப்பு முற்றுப்பெற்றது. வியாபாரங்களில் ஈடுபட்டார். முதலில் துணிக்கடையிலும், பின்னர் திருவனந்தபுரத்தில் மரக்கடை வைத்து நடத்திய காசியாராயண நாடார் மரக்கடையிலும் சிறிது காலம் வியாபாரத்தில் ஈடுபட்டார். அவரது கவனமெல்லாம் தேச விடுதலையிலேயே இருந்தது. வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டார். உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கு பெற்றார்.

காலப்போக்கில் காமராஜர், சத்தியமூர்த்தி தொண்டனாகி, காங்கிரஸ் பேரியக்க உறுப்பினராகி முழு நேரத் தேசப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். விடுதலைப் போரில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணிகள் பகிஷ்காரம், கொடிப் போராட்டம், உப்பு சத்தியாக்கிரகம், சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆகியவற்றில் காமராஜர் பங்கேற்றுச் சிறை தண்டனை பெற்றார்.. அடுத்தடுத்துப் போராட்டங்கள் அனைத்திலும் ஈடுபட்டு பலமுறை சிறை தண்டனைகளை அனுபவித்தார் காமராஜர்..

தமிழ்நாடு காங்கிரஸில், ”காமராஜர் காங்கிரஸ்” என்ற நிலை உருவாகியது. காமராஜர் தனது தியாகத்தாலும், சலியாத உழைப்பாலும், தொண்டுகளினாலும் உயர்ந்த நிலையை அடைந்தார்.

1952-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காமராஜர் சாத்தூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். சுமார் பன்னிரண்டு ஆண்டுகாலம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்து தமிழ்நாட்டிலே காங்கிரஸ் பேரியக்கத்திற்குப் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தித் தந்தார்.

1954- ஆம் ஆண்டு காமராஜர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆனார். தலைவர் பதவியைத் துறந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறந்தார். குடியாத்தம் தொகுதியில் சட்டசபைக்குத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். மேல்சபை உறுப்பினராகி அவர் முதல் அமைச்சர் பதவியை வகித்திருக்கலாம். குறுக்கு வழியில் உள்ளே புகுந்து கொள்ள என்றும் விரும்பாத பெருந்தலைவரே கு. காமராஜர்.

இங்கே நான் காமராஜர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகிச் செய்த சாதனைகளையே பட்டியலிட்டு காட்ட முன் வந்திருக்கிறேன். அதிகம் படிக்காத பெருந்தலைவர் காமராஜர் கல்விக்குச் செய்த சாதனைகள் எண்ணிலடங்காதவைகளாகும். ஏழை, எளியவர், உயர்ந்தவர், தாழ்ந்தோர், ஆக எல்லோருக்கும் கல்வி-இலவசக் கல்வி - பட்டி, தொட்டிகளில் எல்லாம் பள்ளிக்கூடங்கள் - இலவச மதிய உணவுச் சீருடைகள், இப்படிப் பலதிட்டங்களைத் தீட்டி அமுல்படுத்தினார் காமராஜர். தமிழகத்தில் கல்விச் செல்வம் பெருகியது. கிராமங்கள் தோறும் ஓராசியர் பள்ளிகள் திறக்கப்பட்டன.

கல்விக் கேள்விகளில் மட்டும் சிறந்து விளங்கினால் போதுமா? நாட்டிலே பஞ்சம், பசி, வேலையில்லாத் திண்டாட்டங்கள் விலகி விடுமா? சிந்தித்தார் காமராஜர். திட்டங்கள் தீட்டினார். நாட்டிலே புதுப் புதுத் தொழிற்சாலைகளை நிறுவச்செய்தார். தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

காமராஜரின் திட்டங்களால் தமிழ்நாடு முன்னணியில் நின்றது. காமராஜரின் கல்வித் திட்டங்கள் நிறைவேற உடனிருந்து பாடுபட்டவர் அந்நாள் பள்ளிக் கல்வி இயக்குனர் திரு.நெ.து. சுந்தரவடிவேலு ஆவார்.

அதேபோல், காமராஜரின் தொழிற்திட்டங்கள் நிறைவேறக் காரணகர்த்தாவாக இருந்தவர் அன்றைய தொழில் அமைச்சர் திரு. ஆர். வெங்கட்ராமன் ஆவார்.

உலகம் விரும்பும் ஒரு மகத்தான ஆட்டகாரன்


உலகம் விரும்பும் ஒரு மகத்தான ஆட்டகாரன் சச்சின் டெண்டுல்கர் மும்பை மாநகரத்தைச் சேர்ந்த ஒரு நடுத்தரக் குடும்பத்தில் நான்காவது குழந்தையாகப் பிறந்தார் ஒரு வெள்ளிக்கிழமையில் பிறந்த ஏசுபோல் இல்லாமல் சாதாரணமாய் பிறந்து. தனது உழைப்பால் உயர்ந்த .ஒரு உன்னத வீரன். பல கிரிக்கெட் வீரர்களை உருவாக்கிய சாரதாஷ்ரம் வித்யாமந்திர் பள்ளியில் சேர்ந்தார். மும்பையின் பள்ளிகளுக்கிடையிலான போட்டி ஒன்றில், இப்பள்ளியின் சார்பாக விளையாடிய இவரும் வினோத் காம்ப்ளியும் இணைந்து 664 ரன்கள் குவித்து சாதனை புரிந்தனர். பின்னர் 1988/89இல் மும்பை சார்பாக விளையாடிய இவர் 100 ரன்கள் குவித்தார். இது இவர் ஆடிய முதல் மாநிலங்களுக்கிடையிலான போட்டி என்பதும், அப்போது அவர் வயது 15 என்பதும் குறிப்பிடத்தக்கது.

டெண்டுல்கர் 1989ஆம் ஆண்டு தம் 16வது வயதில் முதன் முறையாக இந்தியாவின் சார்பாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் அவரால் ஒரே ஒரு அரைச்சதம் மட்டுமே அடிக்க முடிந்தது. 1990ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக தனது முதல் சதத்தை அடித்தார். அது முதல் இந்திய அணியில் நிலையாக தொடர்ந்து ஆடி வரும் இவர், டெஸ்ட் போட்டிகளில் 12,000 ரன்களுக்கு மேல் குவித்த வீரராவார்

Saturday, October 17, 2009

வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே என்னிடம் வராதீர்கள்

பரலோகத்திற்கு வழிகாட்டுபவர்கள் பணி நியமனத்தில் வழிகாட்ட மறுப்பது குறித்த விசாரனை.---------------------------------------- - எஸ்.ஜி.ரமேஷ்பாபு
- 1 -
இடதுசாரிகள் போராடிக் கொண்டுவந்த "தகவல் பெறும் உரிமைச்சட்டத்தை" எப்படி பயன்படுத்தலாம் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் "வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே என்னிடம் வராதீர்கள்" என்ற இந்த புத்தகம்.
எல்லாம் நன்றாக நடப்பதுபோல இருக்கிறது, திருப்பிக்கேட்காதவரை அல்லது இருப்பதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் வரை. ஆதிக்க சாதியினர் இந்த சமூகத்தின் மீது காலகாலமாய் சுமத்தி வந்த அவர்களுக்கான நீதியை கேள்விக் கேட்டால் கலவரம் என முத்திரை குத்துகின்றனர். தலித்துகளுக்கு எதிரான பாகுபாடு அவர்கள் மண்ணுக்குப் போன பின்பும் அவர்களைப் பின் தொடர்கிறது. கிராம இடுகாடுகள் அவர்களுக்கு எட்டாத தூரத்தில் இருக்கின்றன.மேல்சாதியினர் மறுப்புக்கு உள்ளாகும் இடத்தில் அவர்கள் புதைக்கப்பட்டால் அடுத்தநாள் அவர்களின் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டுத் துவம்சம் செய்யப்பட்டிருக்கும்.
இவைகளுக்கு அடிப்படை காரணம், இந்து மதம் தன்னை தக்கவைத்துக்கொள்ள உருவாக்கிய வர்ணாசிரம அத்ர்மம்இந்த அதர்மமே நமது நாட்டு ஒடுக்கப்பட்ட மக்களை மாற்று மதங்களை நோக்கி விரட்டியது என்பதும், மாற்று மதங்களை வேரறுக்க வர்ணாசிரமம் எத்தகைய சாகசங்களை செய்தது என்பதும் வெகுஜன மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய ரகசியமாய் காத்திருக்கிறது.
இந்திய நாட்டின் சகல கட்டமைப்பிலும் சாதி தன்னை நிலைநிறுத்திக் கொண்டதன் விளைவு உலகமெல்லாம் அன்பை போதித்த கிருத்துவமும், இஸ்லாமியமும் இந்தியாவில் தனது இறுப்பை நிலைநிறுத்த இந்த கேடுகட்ட சாதி அமைப்பை சத்தம் போடாமல் அல்லது எதிர்ப்பது போல பாவனை செய்துகொண்டு கடந்து செல்கின்றன.
"இந்துக்களை ஒன்றிணைக்கும் பிணைப்புகள் என்று எதுவும் இல்லை. இந்து அல்லாதோரிடம் அவ்வாறான பிணைப்புகள் நிறைய உள்ளன".
"இந்துக்களிடம் சாதிக்கு இருக்கும் சமூக முக்கியத்துவம் இந்து அல்லாதவர்களிடம் இல்லை. சாதி விதிகளை மீறியதற்காக ஒரு முஸ்லிமையோ, சீக்கியரையோ சாதியில் இருந்து விலக்கி வைக்க மாட்டார்கள்".
"பிற மதத்தினரிடையே சாதியைக் கடைப்பிடிப்பது என்பது ஒரு புனிதமான மதக்கடமையாக இல்லை. இந்துக்களிடமோ அது கட்டாயக் கடமை. பிற மதத்தினரிடையே சாதி என்பது வெறுமனே ஒரு பழக்கம். பிற மதத்தவர் சாதியை ஆரம்பித்து வைக்கவில்லை. சாதி அவர்களிடம் மிஞ்சி இருக்கிறது அவ்வளவுதான்". என மாமேதை அம்பேத்கர் 'சாதி ஒழிப்பு' என்ற தலைப்பில் 1936 இல் எழுதிய வார்த்தைகளை நினைவில் கொண்டேதான் இதை அணுக வேண்டும்.
ஆனால் நமது நாட்டில் கிருத்துவ, இஸ்லாம் மதங்களில் அதிக அளவு இருப்பவர்கள் தலித் மக்களே. அவர்களுக்கு இந்த மதங்கள் கல்வி என்ற ஆக்கபூர்வ சமூக அலகில் எந்த அளவு இடம் கொடுக்கின்றன என்ற கேள்வியை இந்த புத்தகம் முன்வைக்கிறது.
- 2 -
வேதங்களை கற்பதே கல்வி என்றால் அதை நாங்களும் கற்போம் என்று துணிந்த சம்பூகன் தலையை ராமனே வெட்டிக் கொன்றதாய் வால்மீகி ராமாயணம் கூறுகிறது. சத்திரியன் கர்ணனுக்கும் வேதம் மறுக்கப்பட்டது. ஏகலைவன் கட்டைவிரல் வெட்டுப்பட்டது. பெண்களுக்கும் சூத்திரர்களுக்கும் வேதம் கற்பிக்க முயற்சித்தவன் நாக்கை துண்டாக்கியும், வேதம் ஓதுவதை கேட்பவன் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியும் தங்களுக்கு போட்டியாளர்கள் யாரும் உருவாகிவிடாமல் பார்த்துக் கொண்டதன் காரணமாக (வேதக்)கல்வியிலும், அது சார்ந்த அரண்மனை வேலைவாய்ப்பிலும் ஆக்கிரமித்தனர்.
கையில் பைபிளுடன் வந்த ஆங்கிலேயர்கள், வியாபாரத்தை துவக்கி, பின் நாட்டைப் பிடிக்கை படைகளையும் உருவாக்கினர். அவர்கள் படையில் தலித் மக்கள்தான் முதலில் சேர்ந்தனர் அல்லது சேர்க்கப்பட்டனர். ஏனெனில் இவர்களும் அவர்களைப் போலவே மாட்டுக்கறி உண்ணும் பங்காளிகளாக இருந்தனர். ஊரில் இலவசமாய் வேலைவாங்கப்பட்டு, ஊரின், வாழ்வின் வெளியே ஒதுக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலையும், ஊதியமும், அதுவரை அனுபவிக்காத மரியாதையையும் ஈர்ப்பையும் கொடுத்தது ஆச்சரியமல்ல. ஆனால் கல்வியிலும், அது சார்ந்த அரண்மனை வேலைவாய்ப்பிலும் ஏற்கனவே ஆக்கிரமித்த ஆதிக்க சாதியினர் ஆங்கிலேயர்களின் அலுவல் பணியிலும் சேர்த்து பின் படைவரிசை உள்ளேயும் வந்தனர்.
அவர்களால் தலித் மக்களுடன் ஒன்றிணைய முடியாது என்ற காரணத்தால் பிரிட்டிஷ் படையில் தலித்துகளுக்கு தடை விதிக்கப்பட்டது.சமூக வரலாற்றின் துவக்கத்திலிருந்தே கல்வி மறுக்கப்பட்டவர்கள், திண்ணை பள்ளிகளின் பக்கம் எட்டிக்கூட பார்க்க முடியாதவர்கள் ஆங்கிலேயர் வருகைக்கு பின் எப்படி இருந்தனர்?
பொதுவாய் கல்வி பரவலானது. ஆனால் எவரும் படிக்கலாம் என்ற முற்போக்கு முழக்கத்துடன் வெள்ளைகாரர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி அனைவருக்கும் கிடைத்ததா?
1813 இந்தியாவில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பிரிட்டிஷ் அரசு கல்விநிலையங்களை துவக்கினாலும் 1854 வரை அதாவது 41 வருடங்கள் தலித் மக்களால் அதற்குள் நுழைய முடியவில்லை. 1835 இல் மெக்கல்லே வருகை புதிய கல்வி தத்துவத்தை அறிமுகம் செய்தது. இரத்தத்தால், சதையால் இந்தியன் ஆனால் கலாச்சார சிந்தனையால், உணர்வால் ஆங்கிலேயனாய் இருக்க ஏற்பாடு.
1837 இல் பாரசீக மொழிக்கு பதிலாக ஆங்கிலம் ஆட்சி மொழியானது.
1844 இல் ஹார்டிங் - "ஆங்கில மொழியை கற்க இந்தியர்கள் விரும்புகிறார்கள்" என அறிவித்ததை தொடர்ந்து,
1853 இல் கிழக்கிந்திய கம்பெனி கல்வி குறித்து ஆய்வு செய்தது.
1854 சர் சார்லஸ் வுட் தயாரித்த "அலுவலக நடவடிக்கைகளுக்கான ஆவணம்" வெளியிடப்பட்டது. இது இந்தியாவில் ஆங்கிலக் கல்வி முறைக்கான வேத புத்தகம் என அழைக்கப்பட்டது.
இதன் பரிந்துரையின் அடிப்படையில் 1857 இல் பம்பாய், கல்கத்தா, மதராஸில் பல்கலைக் கழகங்கள் துவக்கப்பட்டது, செனட், தேர்வு முறைகள், பொதுக்கல்வி இயக்குனர் தலைமையில் ஒரு பொதுக்கல்வித் துறை அமைத்தல் என்பவை இன்றுவரை நடைமுறையில் உள்ளது.இத்தனை மாற்றங்கள் நடந்த அதே நேரம் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி நிலை என்ன?
உதாரணம் பம்பாய் ராஜதானி; 1881 ஆம் ஆண்டில் தொடக்கக் கல்வி படிப்பவர்களில்: மொத்த மாணவர்கள் 3,15,633 இதில் தலித்துகள் 2,862 அதாவது 8 சதம். நடுநிலைக் கல்வி: மொத்த மாணவர்கள் 11,245 இதில் தலித்துகள் 17 பேர். அதாவது 0.14 சதம். உயர்நிலைக் கல்வி: மொத்த மாணவர்கள் 4,959 இதில் ஒருவர்கூட இல்லை. கல்லூரிகளில் படித்த 473 பேரில் ஒரு தலித் கூட கிடையாது. (புள்ளிவிபர ஆதாரம்; அம்பேத்கர் கல்வி சிந்தனைகள்)
இன்று உள்ள நிலையோடு ஒப்பிட்டு பார்க்க மேற்காணும் புள்ளிவிபரங்கள் உதவும்.
"வெறும் பட்டப்படிப்பு அல்லது சட்டத்துறைப் படிப்பு படித்து முடிப்பது தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு அதிக பயன் தராது. இந்துக்களுக்கு கூட அது அதிக பலன் அளிக்கவில்லை. எது தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு உதவுமெனில், விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் உயர்தரக் கல்வி கற்பதுதான். இந்தக் கல்வி தாழ்த்தப்பட்ட சாதியினரின் சக்திக்கு அப்பாற்பட்டது. எனவேதான் பலர் தங்கள் குழந்தைகளை வெறும் பட்டப்படிப்புக்கோ, சட்டத்துறை படிப்புக்கோ அனுப்புகின்றனர். சர்க்கார் உதவி இல்லாமல், விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் உயர்தரக் கல்வியின் கதவுகள் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு ஒருபோதும் திறந்திருக்க மாட்டா" - அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பலதரப்பினர் நடத்திய இடையறாத போராட்டம், சுதந்திர இந்தியாவின் கல்வி பரவலாக்கத்தேவை போன்றவை இன்று அரசு கல்லூரிகளில், உயர்கல்விகளில், தொழில்நுட்ப்பத்துறையில், விஞ்ஞானத்துறையில் முழுமையாக இல்லாவிடினும் ஓரளவு தலித் மக்களை முன்னேற வைத்துள்ளது ( ஓரளவு என்பதே கவலைக்குறிய எண்ணிக்கை. இன்று இந்திய அளவில் உயர்கல்வி பெறும் தலித்துகள் எண்ணிக்கை 8.37 சதம்தான்) ஆனால் தனியார் மற்றும் அரசின் உதவி பெறும் தனியார் கல்வி, சிறுபான்மை கல்வி நிலையங்களின் கல்வி நிலை என்ன என்பதை தமிழக அளவில் இந்தப் புத்தகம் ஆராய்கிறது.ஆராய்ச்சியின் முடிவில் பல அதிர்ச்சிகரமான முடிவுகள் வெளிவருகிறது.
- 3 -
தமிழகத்தில் 100 சதம் அரசு உதவி பெறும் சுமார் 160 தனியார் கல்லூரிகளில் இருக்கும் மொத்தப் பணியிடங்கள் (விரிவுரையாளர்கள்) 9,866 இதில் 618 பேர் மட்டுமே தலித்துகள். பழங்குடியினர் எவரும் இல்லை. ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் 5,326 இவர்களில் 838 பேர்மட்டுமே தலித்துகள். பழங்குடியினர் ஒருவர். இதில் கவனம் கொள்ள வேண்டிய செய்தி: அரசு கல்லூரிகளிலுள்ள மொத்த பணியிடங்கள் (விரிவுரையாளர்கள்) 4,915. அதாவது அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் இரண்டு மடங்கு எண்ணிக்கை அதிகம். இடஒதுக்கீட்டின் படி 9,866 விரிவுரையாளர்களில் 1,883 தலித் விரிவுரையாளர்கள் இருக்க வேண்டும் ஆனால் இருப்பது 618 பேர் ஆக 1,265 பணியிடங்கள் மறுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு உதவி பெறும் 160 கல்லூரிகளில் முதல்வராக ஒரு தலித்கூட இல்லை. இதைவிடக் கொடுமை இந்த 160 கல்லூரிகளில் 62 கல்லூரிகள் மத, மொழிவாரி சிறுபான்மையினரால் நடத்தப்படுகிறது. இந்த 62 இல் 50 கல்லூரிகளில் ஒரு விரிவுரையாளர்கூட தலித் கிடையாது. என்ற விபரங்களை கொடுக்கும் இளங்கோவன், "கூட்டம் சேர்க்கவும், தம்முடைய பலத்தையும் நிலைத்தன்மையையும் உறுதிப்படுத்திக்கொள்ளவும் தலித்துகளை சார்ந்திருக்கும் இவர்கள் ஆன்மீக விடுதலை பெறுங்கள்; உங்களுக்கு மோட்சத்தின் கதவு திறந்திருக்கின்றன என்று கூறிவிட்டு நிர்வாகத்தின் கதவுகளை மூடுவதும், பரலோகத்திற்கு வழிகாட்டுபவர்கள் பணி நியமனத்தில் வழிகாட்ட மறுப்பதும், ஆன்மீக அரவணைப்பு எனச் சொல்லி அன்றாட வாழ்வில் கைவிரிப்பதும் முறையா" என கேட்கிறார்.
சிறுபான்மை கல்லூரிகளில் 751 தலித், 49 பழங்குடி விரிவுரையாளர்கள் பணியாற்ற வேண்டும் ஆனால் 61 தலித் விரிவுரையாளர்கள் மட்டுமே உள்ளனர் அதுவும் 61 கல்லூரிகளில் 14 இல் மட்டுமே. இந்த கல்லூரிகளில் 50 கல்லூரிகள் மட்டுமே 100 சதம் மான்யமாக 8 ஆண்டுகளில் பெற்ற தொகை 1064.07 கோடி ரூபாய்.சரி, சிறுபான்மையினர் அல்லாத 101 அரசு உதவி பெறும் கல்லூரிகள் யோக்கியதை என்ன? 1,124 தலித், 62 பழங்குடியினர் இருக்க வேண்டிய இடத்தில் 559 தலித்துகள் மட்டுமே உள்ளனர். இந்த 101 கல்லூரிகளும் அரசிடமிருந்து 8 ஆண்டுகளில் 100 சதம் மான்யமாக பெற்ற தொகை 1503.31 கோடி. உயர்கல்வியில் தலித்துகள் நிலை மிகவும் மோசமாய் உள்ளது. 1999 - 2000 பல்கலை மான்யக் குழு அறிக்கை சுட்டுவது என்ன? பட்டப்படிப்பில் 8.37 சதமும், முதுகலையில் 8 சதமும், ஆய்வு நிலையில் 2.77 சதமுமே தலித்துகள் உள்ளனர்.
இந்தப் பின்னணியில் தகவல் கிடத்த 22 கல்லூரிகளில் ( இதில் 15 கிருத்துவ கல்லூரி, 5 முஸ்லிம் கல்லூரி) கடந்த 10 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கையின் எண்ணிக்கை 1,41,553 இதில் தலித்துகள் 19,581 (13.8 சதம்) பழங்குடியினர் 692 (0.49 சதம்)சோர்வில்லாமல் விபரங்களை தகவல் பெறும் உரிமைச்சட்டத்தை பயன் படுத்தி இந்த நூலில் பயன்படுத்தி உள்ள இளங்கோவன் இன்னும் நிறைய கேள்விகளை முன்வைக்கிறார். படித்த தலித் சமூகத்தை நம்பி பயன் இல்லை என்பதை குறிப்பிடுகிறார்.
ஆனால் இப்பிரச்சினைகளுக்கு போராட்ட வழிமுறைகளே தீர்வு என்பது படிப்பவர்களுக்கு புரியும். ஏனெனில் ஆட்சியாளர்களுக்கு அந்த மொழியில் சொன்னால்தான் புரியும். ஆனால் தனியார் மற்றும் சிறுபான்மை கல்லூரிகளை எதிர்த்து அரசே நின்றால்கூட அது எப்படி இந்தக் கல்லூரிகளால் திசை திருப்பப்படும் என்பதற்கு நமது அண்டை மாநிலமான கேரளா படிப்பினையை தருகிறது. இதை அய்.இளங்கோவன் தெரியாமல் விட்டிருக்க வாய்ப்பில்லை.. ஒருவேலை இந்தப் புத்தகத்திற்கு சம்பந்தமில்லாததாக கருதியிருக்கலாம். ஆனால் விஷயம் அப்படி அல்ல...
- 4 -
கடந்த ஆண்டு கேரளாவில் இடதுசாரி அரசாங்கம் அங்குள்ள தனியார் மற்றும் சிறுபான்மை கல்லூரிகளில் தங்கள் விருப்பம் போல கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்து கொள்ளையடிப்பதை தடுக்க சட்டம் கொண்டுவந்தனர். தங்களது லாப வேட்டையில் அரசு தலையிடுவதை கண்டு கொதிப்படைந்த "கல்வி தந்தைகள்" தங்களது மத அடையாளங்களை புறக்கணித்துவிட்டு அரசுக்கு எதிராக ஒன்றாய் அணிதிரண்டனர். அவர்களுக்கு ஒரு துணைப்பாட நூல் கதை காரணமாய் அமைந்தது.
அந்த துணை பாட நூல் கதை இதுதான்;ஒரு மாணவனை துவக்கப் பள்ளியில் சேர்க்கவரும் அவனது பெற்றோர் அங்கு அவர்களது மதம் குறித்து விசாரிக்கப்படுகின்றனர். காரணம் அவர்களது குழந்தைக்கு மதம் என்னவென்று குறிப்பிடுவதற்காக ஆனால் தங்களது மகனுக்கு மத அடையாளத்தை சொல்ல மறுத்து, அவன் வளர்ந்து அனைத்து மதங்களின் நூல்களையும் படித்து அவைகள் குறித்து தெரிந்துக்கொண்டு தனக்கு தேவையான மதத்தை தேர்ந்தெடுக்க உரிமை உண்டு என வாதிடுவர்.
இந்தக் கதையை எதிர்த்து கேரளாவில் இடதுசாரி அரசு மதச்சுதந்திரத்தில் தலையிடுவதாகச் சொல்லி போராட்டங்களை நடத்தினர்.தேர்தலில் இடதுசாரி அரசுக்கு எதிராக வாக்களிக்க மக்களை அணி திரட்டினர். அவர்களுக்கு கதை பிரச்சனையில்லை தங்களது லாபத்தில் யாரும் தலையிட அவர்கள் அனுமதிப்பதில்லை. அப்படி தலையிட்டால் மதம் என்ற கருவியை பயன்படுத்துவர். ஆக இவர்களை எதிர்க்க கேரளாப்போல கொள்கை வலிமையான அரசு தேவை, அதுமட்டும் போதாது மக்களையும் அணித்திரட்ட வேண்டும் என்ற படிப்பினையை இந்த புத்தகத்துடன் இணைத்து சொல்லவேண்டி இருக்கிறது.
-------------------------------------------------------- ---------------------------------------
வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே என்னிடம் வராதீர்கள்
- ஆசிரியர் ஐ. இளங்கோவன்.
வெளியீடு: தலித்முரசு. விலை 30 ரூபாய்